மியான்மர் கலவரத்தின்போது 86 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 200 இந்து குடும்பங்கள் உயிருக்குப் பயந்து காடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. அதை ஒடுக்க சென்ற மியான்மர் இராணுவத்துக்கும், ரோகிங்யா ஆயுதக் குழுவினருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இராணுவத்தின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள், உயிர் பிழைக்க அண்டை நாடான வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
கலவரத்தில் ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 86 இந்துக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை வங்காளதேச அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் கலு சீல் என்பவர் தெரிவித்துள்ளார்.
ராக்கின் மாகாணத்தில் நடந்த கலவரத்தின்போது முஸ்லிம் வீடுகளுடன் இந்துக்களின் வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்துக்களின் வீடுகளுக்கு மியான்மர் ராணுவம் தீ வைத்தது. எனவே 200 இந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளை இழந்து, அருகில் உள்ள காட்டுப்பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.