ஒட்டுமொத்த கனேடியர்களில் 4.8 மில்லியன் பேர் வறுமைக் கோட்டு எல்லைக்கு கீழான வருமானத்தை பெறும் நபர்களாக உள்ளனர் என்பதனை அண்மைய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
ஒருவருக்கான ஆண்டு வருமானம் 22,133 டொலர்களாக, அல்லது மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருமானம் 38,335 டொலர்களாக எல்லை வகுக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தொகையானனோர் அதற்கும் குறைவான வருமானத்தையே பெறுவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரத் தகவல்களில் இருந்தே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் 4.8 மில்லியன் பேர் இந்த எல்லைக் கோட்டுக்கு கீழே வருமானம் பெறுபவர்களாக உள்ள நிலையில், அவர்களுள் 1.2 மில்லியன் பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும் சில பிராந்தியங்களில் மக்கள் வாடகை செலுத்தாத வீடுகளில் வசிப்பதனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோர் என்று கணிப்பிடப்படும் இந்த எண்ணிக்கையை, துல்லியமான கணிப்பீடாக நோக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிறுவர் வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை ஒழிப்பதற்கு முயன்றுவரும் மத்திய அரசாங்கம், இந்த ஆண்டு வெளியிட்ட உள்ளக அரசாங்க தகவல்களின் அடிப்படையில், சிறுவர் வறுமை எண்ணிக்கை 11.7 இலிருந்து 13 வீதங்களுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2000ஆம் ஆண்டுக்குள் கனடாவில் சிறுவர் வறுமையை ஒழிப்பதாக 1989ஆம் ஆண்டில் நடாளுமன்றில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தற்போது 28 ஆண்டுகள் ஆகியும் வறுமை நிலை ஒழிக்கப்படாமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.