மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஐந்து மாநகரங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன பேரணி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பை சென்றடையவுள்ளது. இந்த வாகன பேரணியில் பெருந்தொகையான மாணவர்கள் கொட்டும் மழை என்றும் பாராமல் பேரணியை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த பேரணியை அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல முறை கொழும்பு நகரை மையாக கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் வைத்தியர்களினால் வைத்தியசாலைகளில் பல தடவைகள் வேலைநிறுத்தப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் குறித்த வாகன பேரணி கொழும்பு நகரை அண்டியிருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த வாகன பேரணி கொழும்பு நகரை சென்றடையவுள்ளது.