தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்று
அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரியும் நேரம் வரையில் எண்ணிலடங்கா சேவைகளைப் புரிந்துவந்திருக்கின்றார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கான பல்வேறு தேவைகளை தொடர்ந்தும் புரிந்துவந்த ஒருவராகவே காணப்பட்டிருக்கின்றார். அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழிநுட்பரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றினார்.அதேவேளையில், விடுதலைப்புலிகள் அமைப்பில் துறைசார்ந்த ஆர்வமானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய கல்விமேப்பாட்டிற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த பெருமைக்குரிய ஒருவராக விளங்கிவந்திருகின்றார்.
பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.
இடையறாது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பெரும் தொண்டாற்றிய உன்னத சேவையாளர் பொன்.சத்தியநாதன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.