மியான்மாரில் சிறுபான்மை றொஹிங்யா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஓடுக்குமுறைகளைக் கண்டித்து ரொரன்ரோவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருமளவானோர் கலந்துகொண்ட இந்த பேரணி நேற்று ரொரன்ரோ குயீன்ஸ் பார்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மியன்மாரில் அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் அனைத்துப் பகுதிகளிலும் சிதறிக் கிடப்பதாகவும், அனைவருக்கும் இந்த உலகில் வாழும் உரிமை உள்ள நிலையில், இவ்வாறு ஒரு கொடூரத்தை தான் பார்த்ததில்லை எனவும் இந்த பேரணியின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
மியான்மாரின் பெளத்த மத இராணுவத்தினர் என்று சந்தேகிக்கப்படுவோரால், சிறுபான்மை றொஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இரக்கமற்ற தாக்குதல்களில் எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைகளை அடுத்து மியன்மாரில் உள்ள றொஹிங்யா இன மக்களில் சுமார் 40 சதவீதம் பேர், அதாவது சுமார் நான்கு இலட்சம் பேர், அருகே உள்ள வங்காளதேசத்தினுள் தப்பிச் சென்று அகதிகளாகியுள்ள நிலையில், இதனை இனச் சுத்திகரிப்பின் ஒரு உதாரணம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையும் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் நேற்று ரொரன்ரோவில் இடம்பெற்ற இந்த பேரணியில் கலந்துகொண்ட மியன்மார் நபர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், தமது கிராமம் அங்கு முற்றாக எரிக்கப்பட்டு, அங்கிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும், அவர்கள் எவருக்கும் அடுத்தநாள் விடியவே இல்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த இனப்படுகொலையை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், மனிதாபிமானத்துக்கு எதிராக இவ்வளவு கொடுமை நிகழ்த்தப்படுகின்ற போதிலும், உலகம் எதற்காக இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.