கடந்த மாதம் கனடாவை வந்தடைந்த அகதிகள் தொடர்பிலான முழுமையான விபரங்கள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான எல்லை தாண்டுதல்கள் ஊடாக பெருமளவானோர் கனடாவுக்குள் அரசியல் தஞ்சம் கோரி வருகை தந்துள்ள நிலையில், அவ்வாறு வந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து ஏதிலிகளின் எண்ணிக்கை தொடர்பிலான விபரங்கள் இதில் அடங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 12,000 பேர் இவ்வாறு கனடாவுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், குறிப்பாக கடந்த மாதத்தில் மட்டும் எத்தனை பேர் வந்துள்ளார்கள் என்ற விபரங்கள் இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூலை மாதத்தின் இறுதிப் பகுதி மற்றும் ஓகஸ்ட் மாதத்தின் தொடக்க காலப்பகுதியில் இருந்து அகதிகளின் நாளாந்த வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன் தெரிவித்துள்ள போதிலும், அகதிகள் வருகை குறித்து கனேடிய அரசாங்கம் அணுக்கமான அவதானிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கனடாவின் தற்போதய கொள்கைகள் அகதிகள் வருகையை அதிகரித்திருப்பதாகவும் சில தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், நேறறு நியூயோர்க்கில் சில அமைப்புகளைச் சந்தித்த அமைச்சர் ஹூசெய்ன் அது குறித்த தனது விளக்கங்களை வழங்கியுள்ளார்.
அகதிகள் வருகை மற்றும் அவ்வாறு வந்தடையும் அகதிகளை கையாளும் முறைகள் குறித்து மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையேயான பேச்சுக்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இன்று வெளியாகவுள்ள இநத அகதிகள் தரவு குறித்து பலத்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.