கனடாவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதனை தடுப்பதற்கும், விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வன்கூவரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மத்திய மற்று்ம் மாநில நீதி அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டின் போது கியூபெக்கின் நீதி அமைச்சர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் தாமும், ஏனைய மாநில நிதி அமைச்சர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், இந்த குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் போது மேம்போக்கான மாற்றங்களை மாத்திரம் மேற்கொள்ளாது, அடிப்படையிலிருந்தே அதனை நவீனமயப்படுத்தி திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக கியூபெக் அரசாங்கம், நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளிகளினதும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், 135 மில்லியன் டொலர்களை அதற்காக தமது அரசாங்கம் முதலிட்டுள்ளதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
இருந்த போதிலும் இன்னமும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகவும், இவ்வாறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துககொள்வதில் ஏற்படும் தாமதத்திற்கு குற்றவியல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளும் காரணமாக உள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.
கொலைக் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பெருமளவு சம்பவங்கள் தொடர்பிலான வழக்குள், நீண்டகாலமாக முடிவுக்கு கொண்டுவரப்படாது நிலுவையில் இருந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளையும் , தீர்ப்பு வழங்குதலையும் விரைவுபடுத்துவதற்கு குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியள்ளார்.