கியூபெக் மற்றும் அல்பேர்ட்டா மாகாணங்களில் வெற்றிடமாக உள்ள தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய தேர்தல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள இந்த இடைத்தேர்தல் அறிவிப்பில், அல்பேர்ட்டாவின் Sturgeon River-Parkland தொகுதிக்கும், கியூபெக் மாநிலத்தின் Lac-Saint-Jean தொகுதிக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைமைவாத கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகங்களின் அந்த பதவியிலிருந்து விலகியதை அடுத்து குறித்த இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான ஆசனங்கள் வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எட்மண்டனுக்கு கிழக்கே அமைந்துள்ள Sturgeon River-Parkland தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இந்த றோனா அம்ப்றோஸ், 2015ஆம் ஆண்டிலிருந்து பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் பதவி வகித்துவந்த வந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சில மாதங்களின் முன்னர் அறிவித்தார்.
அதனை அடுத்து அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த யூலை மாதம் விலகிய நிலையில் Sturgeon River-Parkland தொகுதி வெற்றிடமானது.
அவ்வாறே கியூபெக்கின் Lac-Saint-Jean தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரான இருந்த பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த டெனிஸ் லேபலும் சுமார் பத்து ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பிராக இருந்து வந்த நிலையில் கடந்த யூன் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அந்த தொகுதி ஆசனமும் வெற்றிடமானது.
இந்த நிலையிலேயே த்றபோது குறித்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இரண்டு தொகுதிகளையும் மீண்டும் பழமைவாதக் கட்சி கைப்பற்றுமா என்பது குறித்த எதிர்பார்ப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆண்ட்ரூ ஷெர்ரின் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள் அவரின் திறமைக்கான ஆரம்பகட்ட சோதனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.