ஐ.நா மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் நியூயோர்க் பயணத்தை பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று உலகத் தலைவர்க்ள மத்தியில ஐ.நாவில் முதன்முறையாக உரையாற்றவுள்ள நிலையில், அந்த உரையின் பின்னரே பிரதமர் ஜஸ்டின் ரூடோ அங்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக இன்று நியூயோர்க்கைச் சென்றடையும் அவர், இன்று இரவு இடம்பெறும் முக்கிய நிகழ்வு ஒன்றில் வழங்கப்படும் அனைத்துலக பிரஜை விருதினைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
அனைத்துலக வர்த்தகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றுக்காக பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேற்கொண்டுள்ள முனைப்புகளுக்கு மதிப்பளித்து, அவரைக் கெளரவப்படுத்தும் வகையில், அட்லான்டிக் சிந்தனையாளர்கள் வட்டத்தினால், அனைத்துலகப் பிரஜை என்ற இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இதேவேளை நாளை புதன்கிழமை மடிசோன் சதுக்கத்தில் இடம்பெறும் அபிவிருத்தி மற்றும் வர்த்தகம் தொடர்பிலான நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கு கூடவுள்ள சுமார் 6,000 பேர் மத்தியில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.