மெக்சிகோ நாட்டவர்கள் கனேடிய எல்லை பாதுகாவல் அதிகாரிகளால் கைது செய்யப்படும் சம்பவங்கள், பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சனவரி முதலாம் நாளில் இருந்து, இந்த மாதத்தின் முதலாவது வாரம் வரையிலான நிலவரப்படி, இவ்வாறு 2,391 மெக்சிக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதனை கனேடிய எல்லைக் காவல் திணைக்களத்தின் தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிகை 411 ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையான கைது எண்ணிக்கையானது சுமார் ஆறு மடங்காக உள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் கைது செய்யப்பட்டோரின மொத்த எண்ணிக்கையாக உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் என்ன காரணத்தினால் இந்த ஆண்டில் இவ்வாறு திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அனுமானங்கள் எதனையும் எல்லை பாதுகாவல் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இதேவேளை இநத ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையிலும் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,032 பேர் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மாதத்துக்கு 877 என்ற அளவிலேயே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபரல் அரசாங்கத்தினால் கடந்த டிசம்பர் மாதத்தில் மெக்சிக்கர்களுக்கான நுளைவு அனுமதி நீக்கம் செய்யப்பட்டமை, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி இருப்போரை தேடிக் கண்டுபிடித்து நாடுகடத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை போன்றன இந்த கைது எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும் என்று அவதானிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.