ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, அரங்கில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன என்று நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக, உலகத் தலைவர்களின் பொது விவாதம், கடந்த 19ஆம் நாள் தொடங்கி, நேற்று நிறைவுபெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், முதலாவது நாளிலேயே – 19ஆம் நாள் பிற்பகல் அமர்வில் சிறிலங்கா அதிபருக்கு உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
காலை அமர்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியிருந்தார். அவரது உரையைத் தொடர்ந்து பெரும்பாலான உலகத் தலைவர்கள், பொதுச்சபையில் இருந்து வெளியே சென்றிருந்தனர்.
இதனால், 27 ஆவது பேச்சாளராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாக காட்சியளித்தன.சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது உரையை சிங்களத்திலேயே நிகழ்த்தினார்.
அதேவேளை, இம்முறை பொதுச்சபை அமர்வில் பாலஸ்தீன பிரதிநிதிகள் குழவின் தலைவர் அதிகபட்சமாக 43 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார்.
அவரையடுத்து. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 41 நிமிடங்கள் உரையாற்றினார்.
லிதுவேனிய அதிபரின் உரையே மிகக் குறுகியதாக இருந்தது. அவர் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.