பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகள் விடயத்தினை நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணைக் கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை கொடூரமானது அருவருப்பானது என்று இலங்கை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை சிறை வைத்திருப்பதில் என்ன நியாயம் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு அனைத்துலக தர நியமங்களுக்கேற்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ள போதிலும், அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.