மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
கார்த்திகை 27 ம் நாள் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக, மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்றையநாள் மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாட்டு குழு தலைமையில் இந்தச் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் சிரமதான ஆரம்ப பணியில் மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் இம்முறை சிறப்பான முறையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை நடாத்த வேண்டுமென்றும், தொடர்ந்து நடைபெறவிருக்கும் சிரமதான பணியிலும் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிரமதானம் மூலம் துப்புரவு பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிரமதான ஏற்பாட்டு பணிகளில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்கள், முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களைக் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களது பெயர்களை பதிவு செய்யவும் பங்கெடுக்கவும் குடும்பங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.