சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180இற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், “நமது எம்.ஜி.ஆர்.” அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், டிடிவி தினகரனின் மன்னார்குடி இல்லம் என்று 187 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனைகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மாத்திரமன்றி கர்நாடகா, டில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ள இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் முன்னாள் முதலவரான ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவியும், அதிகாரபூர்வ நாளிதழாக நமது எம்.ஜி.ஆரும் இருந்து வந்ததுடன், அப்போதும் அவற்றின் கட்டுப்பாடுகள் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்தன.
ஆனால் தற்போது சசிகலாவிற்கும், ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுவிட்ட நிலையில், முதலமைச்சருக்கு எதிர் நிலையில் ஜெயா டிவியும் நமது எம்.ஜி.ஆரும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.