மாற்றுக் கருத்துகு்களை ஏற்காமையே தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையநாள் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் சென்று தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகே முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவு ஒரு நிலையிலே நாம் இருக்காவிட்டால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாங்கள் சொல்வதுதான் சரி என்ற எண்ணத்திலே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கவிட்டால், அந்த மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பான நிலையிலேயே இருப்பார்கள் எனவும், அந்த நிலைதான் தற்போது கூட்டமைப்புக்குள்ளும் ஏற்பட்டுள்ளது என்றும் முதமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.