தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்து உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துளள அவர், பேரவையின் பங்களிப்புடன் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஈ.பி.ஆர்.எல்.எப்., சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கி புதிய கூட்டணி உருவாக உள்ளது என்று கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அந்த புதிய கூட்டணி போட்டியிடும் எனவும், அது தொடர்பில் மக்கள் பேரவை உத்தியோக பூர்வ முடிவினை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவெடுத்து, உத்தியோக பூர்வ அறிக்கை ஊடாக அதனை வெளிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.