சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்பல்லைகலைக் கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகி இந்த பேரணி, முதலில் ஐக்கிய நாடுகள் பணியத்திற்கு சென்றதுடன், அங்கு மாணவர்களால் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடாபில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து “அமெரிக்க கோணர்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நோக்கி நகர்ந்து, வட மாகாண ஆளுநரின் பணிமனையை நோக்கி அந்த பேரணி தொடர்ந்தது.
ஆளுநர் பணிமனையை அடைந்ததும், அங்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனு ஒன்றை பேரணியை முன்னெடுத்துச் சென்ற பல்லைகலைகழக மாணவர்கள் கையளித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறித்தியும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தை அனைத்துலக சமூகத்திடம் கொண்டு செல்லும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையிலும் தாங்கள் சனநாயக ரீதியில் இத்தகை போராட்டங்களை முன்னெடுப்பதாக யாழ் பல்கலைக் கழக மாணவர் சமூகம் தெரிவிததுள்ளது.