கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்த அநீதிக்கு முன்னைய ஆட்சிக் காலங்களில் நீதி கிடைக்காத நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு கொண்டிருந்த போதிலும், அது நிறைவேறாத நிலையில், இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2006ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் நாள் மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு சென்ற சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த மாணவர்களை மிலேச்சத்தனமாகச் சுட்டுப்படுகொலை செய்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.