வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, இலங்கை அரசாங்கம் வடமாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம், வடமாகாண முதலமைச்சர் என்ற வகையில் தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, முதலில் மாகாணசபையுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என்பதுடன், வடமாகாண சபையுடன் இணைந்தே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் போது, வடக்கு – கிழக்கிற்கு மாத்திரமன்றி, எல்லா மாகாணங்களுக்கும் சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.