ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் பிரைன் முல்ரோனியின்(Brian Mulroney) மகளான, கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), இந்த தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதான அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியாகியிருந்தன.
கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்புவதாகவும், தான் அரசியலில் ஈடுபடுவதை ஆதரிப்போருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கடந்த வார இறுதியில் அவர் தனது கீச்சப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்த போதிலும், அது குறித்த திட்டங்கள் எதனையும் அவர் வெளியிட்டிருக்கவிலலை.
ரொரன்ரோ வழக்கறிஞரும், வர்த்தகரும், நான்கு பிள்ளைகளின் தயாருமான 43 வயது கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), இதற்கு முன்னர் அரசியலில் பதவிகள் எதனையும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்கு அவர் புதிது என்ற போதிலும், மக்கள் சேவையிலும், கடின உழைப்பிலும், நேர்மைத் தன்மையிலும் அவர் தனது வெளிப்பாடுகளை ஏற்கனவே காட்டியுள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு சமூக மட்டத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், மத்திய பழமைவாதக்கட்சி உறுப்பினர் பீட்டர் வான் லோன்(Peter Van Loan) தெரிவித்துள்ளார்.
எனினும் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ள போட்டியாளர்கள் மத்தியில், அரசியல் அனுபவம் இன்மையே அவருக்கான மிகப் பெரும் சவாலாக உள்ளது என்று, கொள்கை வகுப்பாளரும், குயீன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கத்தி புரோக்(Kathy Brock) கருத்து வெளியிட்டுள்ளார்.