அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன.
அமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது.
“மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்” கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட்டதால் சமீபத்திய மாதங்களாக அமெரிக்க பங்குச்சந்தைகளில் சீரான ஏற்றம் காணப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டொனால்டு டிரம்ப் தனது தலைமையின் கீழ் பொருளாதாரம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை டிவிட்டர் பதிவுகள் மூலமாக தெரிவித்து வருகிறார்.
மற்ற சந்தைகளுக்கும் பரவும் தாக்கம்
டவ் ஜோன்ஸில் ஏற்பட்டுள்ள சரிவு, அமெரிக்காவின் மற்ற பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. பிரபல எஸ்&பி தொழிற்குறியீட்டின் மதிப்பு 4.1 சதவீதமும், பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நாஸ்டாக்கின் மதிப்பு 3.7 சதவீதமும் குறைந்துள்ளது.லண்டன் பங்குச்சந்தையில் முன்னணியிலுள்ள 100 நிறுவனங்களின் தொழிற்குறியீடான எஃப்டிஎஸ்இ( FTSE)-இன் மதிப்பும் 108 புள்ளிகள் அல்லது 1.46 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த திடீர் வீழ்ச்சிக்கு காரணமென்ன?
கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தொழிலாளர் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றம் காணப்பட்டது.
இதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதங்களின் காலம் முடிவடையப்போவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட தொடங்கினர்.