கனடாவில் சளிக்காய்சசலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் இதுவரை குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாளுக்கு நாள் நிலைமை தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்பேர்ட்டாவில் 46 பேரும், மனிட்டோபாவில் 17 பேரும், நோவா ஸ்கொட்ஷியாவில் 27 பேரும் க்டந்த மாதம் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல ஒன்ராறியோவில், வின்ட்சர் பகுதியில் எட்டு பேரும், வோட்டலூ பகுதியில் ஒன்பது பேரும், லண்டன் பகுதியில் 19 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாகவே இந்த பனி காலத்தில் இவ்வாறான சளிக்காய்ச்சல் ஏற்படுவது இயல்பே என்ற போதிலும், இம்முறை அதன் தீவிரத் தன்மை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிலும் இந்த இன்ஃபுளூவன்சா தொற்று தீவிரமடைந்துள்ளதுடன், விரைவில் அது தணியும் வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்படும் நிலையில், கனடாவிலும் இந்த நோய்த் தாக்கத்தின் அளவு உச்சத்தினைத் தொட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக அமெரிக்காவில் இவ்வாறான நோய்த் தொற்று ஏற்படும் காலப்பகுதியில், கனடாவிலும் அவ்வாறான நோய்த் தொற்று ஏற்படுவதாகவும், ஆனால் இம்முறை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் ரொரன்ரோ பொது மருத்துவமனையின் ஆராய்ச்சி மருத்துவர் ஒருவர் தெரிவித்து்ளளார்.