ரொரன்ரோ நகரம் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் எனவும், அதனால் இன்று காலை வேளை போக்குவரத்துகள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ள இநத சிறப்பு வானிலை அறிக்கையில், இன்று அதிகாலை வேளையிலேயே ரொரன்ரோவில் பனிப்பொழிவு அதிகரிக்க ஆரம்பிக்கும் எனவும், இன்று பிற்பகல் அளவில் சுமார் பத்து சென்ரிமீட்டர் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக, இன்று காலைநேர போக்குவரத்துகள் கடுமையான நெருக்கடியினைச் சந்திக்க கூடும் எனவும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று காலை வேளையில் பயணிப்போர், நேரத்துடனேயே தமது பயணத்தினை ஆரம்பிக்குமாறும், வாகன சாரதிகள் அவதானமாக வாகனத்தினைச் செலுத்திச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
பனி வீழ்ச்சி அதிகமாக காணப்படும் என்பதனால், பார்வைப் புலமும் குறைவாகவே இருக்கும் எனவும், குறிப்பாக ஒன்ராறியோ எரியின் கரையோரப் பகுதிகளில், பனிப் பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரித்த பனிப்பொழிவானது இன்று மாலை வரையில் தொடரக் கூடும் எனவும், இதன்போது ரொரன்ரோவில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே 4 பாகை செல்சியஸ் வரையில் செல்லும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய இநத பனிப் பொழிவு காரணமாக பாடசாலைப் பேரூந்துகளும் தமது சேவை நிறுத்தம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் தமது நிர்வாக எல்லைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்குமான பேரூந்துக்ள இன்று சேவையில் ஈடுபடமாட்டாது என்று யோர்க் பிராந்திய பாடசாலைகள் சபை அறிவித்துள்ளது.
அதேபோல ஹமில்ட்டன் அரச பாடசாலை மற்றும் கத்தோலிக்க பாடசாலை சபைகளும் தமது பாடசாலைகளுக்கான பேரூநு்து சேவைகள் இன்று செயற்படாது என்றும், ஆனால் பாடசாலைகள் திறந்திருக்கும் என்றும் அறிவித்து்ளளன.