இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியளவில் முடிவடைந்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு 70 இற்கும் அதிகமான வீதமாக அமைந்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை மாத்தளை மாவட்டத்திலே அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் களுத்துறை, அநுராதபுரம், மொனறாகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவாக 75வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மையான பகுதிகளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாததோடு அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை 2018ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 62 சதவீத வாக்குப்பதிவே இடம்பெற்றுள்ளதனை யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ். மத்திய கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துளள அவர், யாழ். மாவட்டத்தில் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெற்றதாகவும், 243 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றையநாள் தேர்தல் சட்டங்களை மீறிய 8 வேட்பாளர்கள் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் சட்டங்களை மீறிய பல நபர்கள் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.