இன்று இடம்பெற்றுமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி, சிறிலங்கா பொது ஜன முன்னணி 15 மாவட்டங்களில் வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி கிடைத்திருப்பதாக மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்கள், பிரச்சினைகள், அழுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகவும், தோல்வியடைந்த தரப்பிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வெற்றியாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அத்துடன் பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தத் தேர்தலில், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெறும் என்று வெளியான புலனாய்வு தகவல்கள் முற்றிலும் தவறாகிப் போயுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது