ஒற்றையாட்சியின் பாதிப்பு குறித்து தமிழ் மக்களின் வீடு வீடாக சென்று எடுத்துரைக்க உள்ளோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் இடைக்கால அறிக்கைக்கு ஆணை கேட்டே போட்டியிட்டார்கள் எனவும், அதற்கு மக்கள் முழு ஆதரவை தெரிவிக்காத நிலையிலும், தொடர்ந்தும் ஒற்றையாட்சியை மக்கள் மத்தியில் திணிக்கவே கூட்டமைப்பின் தலைமைகள் முனைகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் ஒற்றையாட்சியின் பாதிப்பை மக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை காப்பற்றி விட்டவர்கள் தான் இன்று மகிந்த வென்று விட்டார் என்றும், நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் கோரிய எதனையும் நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி செய்யவில்லை எனவும், ஏனெனில் தமிழ் மக்கள் கோரியதை செய்தால் மகிந்த குழம்புவார் எனவும், அதனால் தெற்கு குழப்பமடையும் என்று கூறிவந்தார்கள் எனவும் அவர் விபரித்துள்ளார்.
மகிந்தவை அனைத்துலகம் முன்பாக போர்க் குற்றவாளியாக முன்னிருந்த நாம் போராடி வந்த வேளையில், மகிந்தவை காப்பற்றும் முயற்சியில் கூட்டமைப்பினர் ஈடுபடனர் எனவும், ஆனால் தற்போது நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் தெற்கில் மகிந்த பாரிய வெற்றியை பெற்றுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நிலையில் அன்று மகிந்தவை காப்பற்றியவர்கள், இன்று மகிந்த வென்றவுடன் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்றனர் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.