நாட்டில் காணப்படும் நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்தி, புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமக்குக் கிடைத்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றும், சிறீலங்கா பொதுஜன பெரமுன 232 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் முறைமையிலும் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாகவும், இன்னும் முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு ஒரே முடிவு, நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அரசாங்கம் யோசனை ஒன்றை கொண்டுவருமாக இருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.