தெற்கில் மகிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியான நிலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு, தமிழ் தேசிய கொள்கையில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
வரவிருக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள் எனவும், இந்த நிலையில் மகிந்த அணியினரால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு, ஒரே திசையில் பயணிக்கின்ற நாம், ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது, தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது எனவும், குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பரப்புரை செய்திருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என்று பரப்புரை செய்த நிலையில், சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.