யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக பரிமானம் எடுத்துள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது.
ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% த்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%த்தினையும் பெற்றதுடன், வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 1,04,513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64,580 வாக்குகளையும் பெற்றுள்ளன.
மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய ஆசனங்களாக 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
இந்த வகையில் போரின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளவில்லை என்பதுடன், 2018 உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 80களில் வீறுகொண்ட ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், இலங்கையின் பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவிய போதிலும், இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளமை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வாகும் நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.