தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன எனவும், அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அத்துடன் பிடிவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெரும்பான்மைக் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற போதிலும், ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும், ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் இன்னுமொரு பெரும்பான்மைக் கட்சி இணைந்தே செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறு இருந்தாலும் தற்போதைய நிலையில் ஏதாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை உள்ளது எனவும், இதற்கு எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றும், கடும் நிபந்தனைகளை யாரும் விதிப்பது நல்லதல்ல எனவும், இணக்கப்பாட்டுடன் செல்வதே நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்க் கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன எனவும், தாங்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகவில்லை என்றும், சமஷ்டிக் கட்டமைப்பில் இருந்தும் விலகவில்லை என்றும், வடக்கு கிழக்கு இணைப்பிலும் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அடுத்த அரசியலமைப்பில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டும் தேசிய மொழியாக்கப்படும், பிரயோக மொழியாக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும், மாற்றங்கள் இடம்பெற்றுத் தான் இருக்கின்றன என்றும், ஆகையால் வடக்கு கிழக்கு இணைப்பும் அவ்வாறான மாற்றங்களில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனபடியால் அதனை விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை எனவும், தமது கொள்கைகளில் உறுதியாகவே உள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.