தமிழ் மக்கள் பொதுவாகத் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி உற்றிருக்கின்றார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன எனவும், மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது எனவும், இதனால்தான் சில கட்சிகளுக்கு வீழ்ச்சியும் சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காலாதிகாலமாக ‘வீடு’ சின்னத்திற்கு வாக்களித்த பலர் தற்போதைய தலைமைத்துவத்தைப் பிடிக்காததாலோ என்னவோ, இம் முறை யாழ் மாவட்டத் தேர்தலில் ஈடுபடவில்லை என்று தெரிகின்றது எனவும், உதாரணமாக கிளிநொச்சியில் 74.82 வீதமும், முல்லைத்தீவில் 77.49 வீதமும், மன்னாரில் 81.38 வீதமும், வவுனியாவில் 74.03 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் 70.84 விகிதத்தினரே வாக்களித்துள்ளார்கள் எனவும், சில புள்ளி விபரங்கள் இன்னும் குறைத்தே யாழ் வாக்களிப்பைக் குறிப்பிடுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க புள்ளி விபரங்களின் படி தமிழரசுக்கட்சி 2015ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குத் தொகை 5,15,963 ஆக இருந்த நிலையில், இம்முறை அந்தத்தொகை 3,39,675 ஆக குறைந்து, 34 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது உரிமைகளை, உரித்துக்களை, தொடர்ச்சியாக ஆணித்தரமாக எமது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளையும் முன்வைத்து, அரசாங்கத்திடம் நீதியானவற்றை, நியாயமானவற்றைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால், தெற்கில் யார் வந்தாலும் எம்மவர் பயப்படத்தேவையிருந்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது, பலவிட்டுக் கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை, தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடமாகாண சபையின் நிர்வாகங்களைச் சரியானமுறையில் செய்யவிடாமல், தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர் எனவும், எம் மக்களையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி, இருட்டறையில் தள்ளிவிட்டு, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள் எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரான தனக்கே என்ன நடைபெறுகிறது என்று தெரியாத நிலையில், மக்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று தான் எண்ணிப்பார்த்ததுண்டு எனவும் தெரிவித்துள்ள அவர், இவை யாவும் வெளிப்படைத் தன்மையற்ற நடபடிமுறைமையின் பிரதிபலிப்புக்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்பட்டு, சகலரையும் பங்குதாரர்களாக உள்வாங்கி, ஆக்கபூர்வமான தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளை கட்சிவேறுபாடுகள் கடந்து முன்னெடுத்து, எமது மக்களுக்கான பணியை ஆற்ற நாம் யாவரும் ஒன்று கூட வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.