இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்க தேசியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டானியல் கோட்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தற்போது அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், புதிய ரக அணுகுண்டுகளையும், கடல் வழி மற்றும் வான்வழி தாக்குதல் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை புதிதாக உருவாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் இந்தியாவுடன் உள்ள நட்புறவை நீடிக்க விரும்பவில்லை என்றும், அதிலிருந்து விலகிச் சென்று வருவதுடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும், இதன் மூலம் இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் போக்கை மேலும் அதிகரிக்க செய்யலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் அமெரிக்க தேசியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் கூறியுள்ளார்.