பதவிகளில் ஒட்டி நின்று மக்கள் நிலையறியாது இருந்தவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியைத் தந்துள்ளமை உண்மைதான் எனவும், அதிர்ச்சியில் இருந்து விடுபட சில காலம் ஆகும் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்போது தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்துள்ளவர்கள் அனைவரும் தமது குறைபாட்டை முற்றாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், எனினும் தமது குறைபாடுகளை எமது சிங்கள, தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீளாய்வு செய்ய இது தக்க தருணமாய் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமை அவசியம் என்பதை அடுத்தடுத்துக் கூறிவருவதாகவும், கட்சிகள் சுய நலத்துக்காக ஒன்றுபடும் என்ற போதிலும், தமிழ் மக்கள், கட்சிகளின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற் சென்று ஒரு இயக்கமாய் ஒருங்கிணைந்து, தமது உரிமைகளைப் பெற அஹிம்சை வழியில் போராட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தலைமைகள் கட்சிப் பாகுபாடு இன்றி கொள்கையால் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு எமது கருத்துக்களையும் கஸ்டங்களையும் எடுத்துரைக்க வேண்டும் எனவும், அரசியல் யாப்பு மாற்றங்கள் எல்லோரின் ஒத்துழைப்புடன் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாற்றங்கள் என்று கூறும் போது மாற்றத்துக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு, வெளிப்படையாக அது பற்றிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு, முடிவெடுத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இந்தத் திட்டத் தயாரிப்பில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் போன்றவற்றின் பேராளர்களும் பங்குபற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகள் வேண்டாம் எனவும், புலம்பெயர்ந்தோர் வேண்டாம் என்று கூறுவது, பெரும்பான்மை அரசியல் வாதிகள் தமக்கிருக்கும் அதிகாரங்கள் குறைந்து விடுமே என்ற ஆதங்கத்தால் தான் எனவும், அதனால்த்தான் எமது பிரச்சினை தீராது இதுவரையில் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் விபரித்துள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளும், புலம்பெயர் தமிழர்தம் பேராளர்களும், 1987ஆம் ஆண்டில் 13வது திருத்தச்சட்டத்தை ஏற்படுத்திய இந்திய நாட்டின் பிரதிநிதிகளும் சேர்ந்திருந்து, இலங்கையின் இனப்பிரச்சனையை அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதே உசிதம் எனவும், அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்திற்கான நெருக்குதல்களை நாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எவ்வாறு எமக்கென ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டம் நாடு முழுவதற்கும் ஏற்புடைத்தாக்கப்பட்டதோ, அவ்வாறே நாம் அனைவரும் சேர்ந்து ஐக்கிய சோஷலிச சமஷடிக் குடியரசொன்றை நிறுவ முன்வர வேண்டும் எனவும், ஒன்பது மாகாணங்களும் சமஷடி அலகுகள் ஆக்கப்பட்டு, எந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களும் ஒருவரோடு ஒருவர் இணைய இடமளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கொள்கை ரீதியில் ஒன்றுபடுங்கள் என்பதையும், சில்லறை நலன்களை ஆட்சியாளர்களிடம் இருந்து பெற முனைந்தீர்களானால், நீங்கள் காலாகாலத்தில் பெரும்பான்மையினரின் வலைக்குள் சிக்கி, நாளடைவில் உங்கள் தனித்துவத்தை இழந்து விடுவீர்கள் என்பதையுமே தான் தமிழ் மக்களுக்கு ஆணித்தரமாகக் கூறவிரும்புவாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை, பலப்பிட்டிய, நீர்கொழும்பில் இருந்து கற்பிட்டி வரையான பிரதேசத்தில் தமிழர்களாக இருந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாறியதை மறந்துவிடாதீர்கள் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.