சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதுடன், ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இந்த அரசாங்கத்தை ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமைச்சுப் பதவிகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல், சுதந்திரக் கட்சியின் சிறுபான்மை அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணி உத்தியோகபூர்வமற்ற ரீதியில் சம்மதித்துள்ளது என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஒன்றிணைந்த எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு, மஹகமசேகர மாவத்தையிலுள்ள சனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியின் 52 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் 26 உறுப்பினர்களின் துணைகொண்டு, இந்த அரசாங்கம் அமைக்கப்படும் என்று தெரியவருகிறது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக 4 பேரின் பெயர்கள் ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ளன எனவும், இது தொடர்பாகவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனாதிபதியுடன் கலந்துரையாடினர் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக திங்கட்கிழமை இரவு சனாதிபதியைச் சந்தித்த சுதந்திரக் கட்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியிருந்ததுடன், பிரதமர் மாற்றப்படாவிட்டால், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் பலர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு சனாதிபதியைச் சந்தித்தபோது, இரண்டு கட்சிகளும் இணைந்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, செயற்குழுவொன்றை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இவற்றுக்கு மத்தியில் புதிய அரசாங்கத்துக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, ஐக்கிய தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள், ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன என்று கூறப்படுகிறது.