வரலாற்று பழமை மிக்க வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு கிராமத்திலுள்ள வெடுக்குனாறி மலையை பாதுகாக்க வட மாகாணசபை முடிவெடுத்துள்ளது.
அந்த வகையில் மக்கள் இந்த மலைக்கு சென்று வருவதற்கான பாதை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதற்கும் வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது குறித்து ஆராய்வதற்காக முதலமைச்சரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று வெடுக்குனாறி மலைக்கு சென்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வெடுக்குனாறி மலை அமைந்துள்ளதுடன், இந்த மலையில் ஆதி சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
வரலாற்று பழமை மிக்க இந்த மலையையும், அங்குள்ள ஆலயத்தையும், ஒலுமடு கிராம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பாதுகாத்து, புனித தன்மையுடன் பேணி வருகின்றார்கள்.
இந்த நிலையில் வெடுக்குனாறி மலை அமைந்துள்ள பகுதியை அண்மித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த மலையில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கவும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் உள்ள மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்மையில் அங்கு சென்று ஆய்வு செய்த யாழ். குடாநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ். ஊடக அமையத்தின் ஊடாக வட மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து இந்த மலையையும், அங்குள்ள ஆதிசிவன் ஆலயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் வீதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்று கொடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே ஆரம்பகட்ட நடவடிக்கையாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வெடுக்குனாறி மலைக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.