உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள் எனவும், கட்சியைப் பற்றியோ, கொள்கை பற்றியோ அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்றும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலைப்பாடு காலப்போக்கில் அவர்களுக்கே பாதிப்பை உண்டாக்கும் எனவும், இதற்கு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த உதாரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள், கொள்கை ரீதியாக இணைந்து செயற்படக் கூடிய கட்சிகள் இணையவேண்டும் எனவும், அது தமிழ் மக்களுக்கு நிச்சயமாக நன்மை பயப்பதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்த தனது தரப்பு கருத்தினை வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் என்று முன்னரும் பல தடவைகள் தான் கூறியிருப்பதாகவும், அந்தக் கருத்து இப்போது பலராலும் வலியுறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசியத்துடன் சம்மந்தப்பட்ட சகல கட்சிகளும் எழுத்துமூலமாக வெளியிடும் ஆவணங்கள் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களில் கொள்கைரீதியான ஒன்றுமை உள்ளது எனவும், ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளில் கொள்கை ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளில் கட்சிகள் இணைவது அல்லது பிரிவது குறித்து இப்போது ஒன்றும் கூற இயலாது எனவும், காரணம் இறுதியாக அவர்கள் என்ன அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்போகிறார்கள் என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்பாடு பட்டேனும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காக கொண்டவர்கள், எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியமைத்து விடுவார்கள் எனவும், அவர்கள் கட்சியை பற்றியோ, கொள்கையை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்ளைரீதியாக இணைய முடியுமாக இருந்தால் மட்டுமே இணையவேண்டும் எனவும், அவ்வாறு ஒன்றிணைந்தால் தமிழ் மக்களுக்கு அது நன்மை பயக்கும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.





