இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.
கூட்டு எதிரணியின் உதவியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பது தொடர்பாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, கூட்டு எதிரணியின் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைப்பதற்கு கூட்டு எதிரணி ஆதரவு வழங்குவதாக இலங்கை அதிபரிடம் தெரிவித்துள்ளது.
எந்த நிபந்தனையுமின்றி தாம் ஆதரவு வழங்கவுள்ளோம் என்று இலங்கை அதிபரிடம் தாம் தெரிவித்ததாகவும், கூட்டு எதிரணியினர் எவரும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டார்கள் என்றும், சந்திப்பின் பின்னர் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போதே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கோருவதாக மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, கூட்டு எதி்ரணிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவுக்கு தினேஸ் குணவர்த்தனவும், சுசில் பிரேம ஜெயந்தவும் தலைமை தாங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது