ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் இலங்கை தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், இலங்கை, பெனின், பாகிஸ்தான், சாம்பியா, ஜப்பான், உக்ரேன் ஆகிய நாடுகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மீதே மார்ச் 16ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
அதேவேளை இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை மார்ச் 21ஆம் நாள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொது விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த விவாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கை தொடர்பான காட்டமான கருத்துக்களை முன்வைப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், பொறுப்புக்கூறல் விவகாரங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.