விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
பிரித்தானிய பிரஜையான ஹிப்ஹொப் பாடகி மியா என்று அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள் பிரகாசத்தின் கதை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கு மாதங்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.
மியாவின் தந்தை அருள் பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் எனக் கூறப்படுவதுடன், மியா தனது 9 ஆவது வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இலங்கைக்கு பயணம் செய்த மாதங்கி, வடக்கில் நிலைமைகள் தொடர்பிலான காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும், 22 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மியா என்ற பெயரில் பிரலமான பாடகியாக இருந்து வரும் மாதங்கி தனது பாடல்களில் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படும் பல்வேறு அநீதிகள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.