நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடையே திடீரென பேசினார். அப்போது தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தரவேண்டாம் என்றும் மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையை பார்ப்போம் என்றும் கூறினார்.
ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்கு பின் தமிழக அரசியலில் இறங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் கடந்த டிச.31 அன்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேச ஆரம்பிக்க அது விவாதமாக மாற அவரும் அரசியலில் இறங்குவேன் என்று அறிவித்தார். நடிகர் விஷாலும் அரசியலில் குதிப்பேன் என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த ரஜினி மக்கள் மன்றம் என்று ஆரம்பித்து அதற்கு நிர்வாகிகளை நியமித்து மாவட்டவாரியாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆனால் அதற்குள் நடிகர் கமல் தனது கட்சியின் பெயர், நிர்வாகிகளை அறிவித்து தனது அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார்.
முதலில் கட்சி ஆரம்பிப்பேன் என்று அறிவித்திருந்த ரஜினிகாந்த் இன்று தனது நிலையை திடீரென அறிவித்துள்ளார். இதுவரை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தனது ரசிகர்களுடன் வீட்டிலிருந்தே பேசிவந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தார்.
இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்திப்பதாக இருந்தது. ரஜினியே நேரில் வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் பேசினார். அவரது பேச்சில் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததும், ரஜினி ரசிகர்கள் அரசியல் அறியாதவர்கள் என்ற கருத்துக்கும் பதில் சொல்வதாக அமைந்திருந்தது.
‘கட்டமைப்புதான் முக்கியம்’
ரஜினி பேசும்போது, “ரொம்ப சந்தோஷம். நீண்ட பயணம் இது. நாம் அனைவரும் சேர்ந்துதான் பயணம் செய்யப் போகிறோம். உங்கள் சந்தோஷம்தான் எனக்கு மகிழ்ச்சி. உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிறது கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருக்கவேண்டும். 32 மாடி கட்டிடத்தை கட்டி வருகிறேன். அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். கட்டமைப்பு சரியாக இருந்தால் தான் தேர்தலில் தோற்றாலும் கட்சி நீடிக்கும்.
எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் நடத்த வேண்டாம். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக இருந்து நமது வேலையைப் பார்ப்போம். விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக வந்து ரசிகர்களை சந்திப்பேன்” என்றார்.
அதன் பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் காவிரி பிரச்சனைப்பற்றி கேட்டபோது சிரித்தப்படியே பதில் சொல்லாமல் சென்றார்.