இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குமுறல்களை பிரதிபலிக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்றையநாள் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை, அதாவது உண்மையான அவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, அரசியலின் நிலையான தன்மையை நோக்கமாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார்.
அது மாத்திரமின்றி இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு மறைமுகமான இணக்கம் தெரிவித்து, ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மக்களிடத்தில் அதனை திணிப்பதற்கும் கூட்டமைப்பு முயற்சித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டுமாயின், மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்பதோடு, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூறல் நியாயமாக நடைபெறவேண்டுமாயின், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அல்லது தீர்ப்பாயம் ஒன்றிணை அமைத்து அதன் மூலம் தீர்வினை பெற்றுக்கொண்டால் தமிழ் மக்களுக்கு ஏற்றதொரு தீர்மானம் கிடைக்கும் எனவும், ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் கலந்துக்கொண்டு கையொப்பம் இடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி அனைத்துலக குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது