கனடாவின் மத்திய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள நிலையில், அதில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையீடு செய்யக்கூடும் என்ற விடயத்தில் கனடா அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்று CIA எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகத்தின் முன்னாள் இயக்குனர் ஜோன் பிரனென் தெரிவித்துள்ளார்.
கனடா மட்டுமின்றி எந்தவொரு சனநாயக நாடும் தற்போதய காலத்தில் தமது தேர்தல்களின்போது வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டுள்ளார்.
அந்த வகையில், ஐரோப்பா மற்றும் உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே, கனடாவும் அதன் தேர்தலில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும், இவ்வாறான நாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்கள், நாடுகளின் தேர்தல் முறைமை உள்ளிட்ட பல விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கனடா தனது தேர்தல்களில் இடம்பெறக்கூடிய இவ்வாறான அச்சுறுத்தல்களை இனங்கண்டு, அவற்றை தடுக்கம் வகையில் தேர்தல் முறைமைகளைக் கடுமையாக்கி, தனது தேர்தல் கட்டமைப்புக்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.