இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை சந்திப்பு ஒன்றில் இலங்கை சனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக, அந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பதற்றத்தை தணிக்க கூடிய வகையில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறிய அவர், உடனடியாக காவல்துறையினரும் இராணுவத்தினரும் அதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அவசரகாலநிலையை மேலும் நீடிப்பதா என்பது குறித்து 10ஆவது நாளில் சனாதிபதி அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று திங்கள்கிழமை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து கண்டி மாவட்டத்தில் நேற்று இரவு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தாம் தங்கியிருந்த பகுதிகளின் மீது இரவு வேளையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டோ அல்லது நிர்மூலம் செய்யப்பட்டோ உள்ளதுடன், பல சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது.
காவல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் தாம் தாக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அங்கு அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இன்று அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல், மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த போதிலும், திஹன மற்றும் பல்லேகல்ல ஆகிய காவல் பிரிவுகளில் அந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் வன்முறைச் சம்பவங்கள் பெரிதாக எங்கும் நடக்கவில்லையாயினும், மாலையில் நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக அந்தப் பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.