ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தமக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பான தீர்ப்பை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றுள்ளது.
இன்றைய விசாரணையின் போது பேரறிவாளன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாக்குமூலத்தைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
9 வாட் மின்கலத்தைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்பது பேரறிவாளனுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள், மின்கலத்தைத் தாண்டி பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளனர்.
பல்வேறு தருணங்களில் விடுதலைப் புலிகள் சார்ந்த நபர்களுடன் பேரறிவாளனுக்கு தொடர்பு இருந்துள்ளது என்றும், வாக்குமூலத்தை கொண்டு பார்த்தால் விடுதலைப் புலிகளின் அனுதாபியாக பேரறிவாளள் இருந்தது தெரிகிறது என்றும் கூறியுள்ள நீதிபதிகள், 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற முடியுமா எனவும் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தான் வாங்கி கொடுத்த மின்கலம்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது நிரூபணமாகவில்லை என்று பேரறிவாளன் முன்வைத்த வாக்குமூலத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.