இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை மிகவும் ஆபத்தானது என்று போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளுவதற்கான அமெரிக்காவின் முன்னாள் சிறப்பு தூதுவர் ஸ்டீவன் ராப் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் 37வது ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது எனவும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதிலும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவுகளாலேயே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன எனவும், குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்றும் ஸ்டீவன் ராப் மேலும் தெரிவித்துள்ளார்.