காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று நடந்து வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டையுடனே கலந்து கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத்தயார் என கூறினார்.
இதனை அடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, அவர் திமுகவை விமர்சித்து சில வார்த்தைகள் பேசியதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதன் பின்னர், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.