சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின் பக்க அமர்வாக, இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறும் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, சித்திரவதைகளிலிருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனைக்கான பதில் இயக்குநர் ஆன் ஹனா, மனித உாிமை செயற்பாட்டாளர் கார்லஸ் கஸ்ட்ரசானா ஆகியோரின் தலைமையில் குறித்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறிலங்கா இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, தண்டனையிலிருந்து தப்பித்துள்ளதாக குறித்த அமைப்பு தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.
இவ்வாறானவர்களுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகி, மாறாக அவர்களுக்கு அரசதந்திர பதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பாகவும் அது அதிருப்தி வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்றையநாள் நடைபெறும் விவாதத்தில் இந்த விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
அத்துடன் நீதியை நிலைநாட்ட இலங்கையை அனைத்துலக நீதிவிசாரணை பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய விவாதத்தில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கவுள்ளனர்.