இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சிறப்பு கருத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளனர்.
அத்துடன் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துலக நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் காலக்கிரம மீளாய்விற்கு உட்பட்ட நாட்டின் பிரதிநிதி மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாத்திரமே இந்த விவாதத்தில் உரையாற்ற முடியும்.
இதன்போது ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகள் விரைவாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளனர்.
இதேவேளை குறித்த பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைபடுத்துவோம் என்பது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கையின் சார்பில் இந்த விவாதத்தில் உரையாற்ற உள்ளார்.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த இந்த விவாதம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாகவே 19 ஆம் நாள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 2017 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைபடுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதம் எதிர்வரும் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்திலும் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கலந்து கொண்டு உரையாற்றவுள்ள நிலையில், இந்த விவாதத்தின் போது ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கையினை வெளியிட உள்ளார்.
செயிட் அல் ஹசைனின் அறிக்கை ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், அதன் சாரம்சத்தையே புதன்கிழமை முன்வைப்பார் என்பதுடன், இந்த விவாத்தில் ஐ. நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.