இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை பாலஸ்தீன அதிபர்மஹ்மூத் அப்பாஸ், நாயின் மகன் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.
இந்த நிலையில், கடந்த மாதம் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
ட்ரம்பின் இந்த முடிவை பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம் – அமெரிக்கா இடையே உறவு முற்றிலுமாக சிதைந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பாலஸ்தீனம் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பேசும்போது, “இஸ்ரேலின் டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதார் ஒரு குடியேறியவர், நாயின் மகன்” என்று விமர்சித்தார்.
அப்பாஸியின் இந்த பேச்சை சர்வதேச அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ஃப்ரீட்மேன் பதிலளிக்கும்போது, “அப்பாஸி நீங்கள் என்னை நாயின் மகன் என்று கூறியுள்ளீர்கள். இது பழமைவாத பேச்சா? அல்லது அரசியல் சொற்பொழிவா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்” என்றார்.
பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸியின் இப்பேச்சை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும்வும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.