மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நம்பி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நிறுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்து, ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஜி.எஸ்.பி வரிச் சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீள வழங்கியிருந்தது.
இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் உண்மைக்கான ஆணைக்குழுவை நிறுவுதல் தொடர்பிலான விவாதமொன்று பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றையநாள் நடைபெற்ற நிலையில், இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பிரித்தானிய ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் விடயத்திலும் பொறுப்புக்கூறல் தொடர்பிலும் இலங்கை அரசு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு தனது இணக்கத்தை வெளிப்படுத்திய பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ், இலங்கை அரசு தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கை அரசு வெளிப்படுத்திய ஓரளவு முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்தே அதற்கு சன்மானமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டதாகக் கூறிய பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ், எனினும் இது பிரச்சனைகளில் இருந்து தப்பிச் செல்வதற்கான அனுமதி என்று இலங்கை அரசு கருதுமானால், அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி தடையின்றி முன்னேறிச் செல்வதற்கு சாதகமான வரிச் சலுகை அமைந்ததாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய பிரதி அமைச்சர், அந்த அனுமதியை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.